Wednesday, September 24, 2008

மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்


மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் என வரையறுக்கலாம். உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான அம்சங்கள் என வரையறுக்கலாம். இது செயற்பாட்டில் இன்னொருவருடைய செயற்பாடுகளைப் பாதிக்கக் கூடாததாகவும் இருத்தல் வேண்டும். மனிதன் தனது இயற்கையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுள்ள வழிமுறைகள் என்றும் வேறு வகையில் கூறலாம். ஆரம்ப காலங்களில் மனிதன் கட்டுப் பாடற்ற பூரணத்துவமான உரிமைகளை அனுபவித்து வந்தான். காலம் செல்லச்செல்ல சனத்தொகை வளா்ச்சி அதிகரிப்பினால் வளங்கள் அருகி வரத் தொடங்கியதன் விளைவாக மனிதன் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிப்பதில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படத் தொடங்கின. இதன் காரணமாக மனிதன்- மனிதனாக வாழ்வதற்கு அடிப்படையான உரிமைகள் யாவை என வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.


உலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து கொள்ளல் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த அதிகரிப்பு இருந்து வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மீதான பாரிய மீறுகைகள் கட்டுமீறியவையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான சுதந்திரம், சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய பொதுவிலமைந்த தரங்களை அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த எல்லா மக்களும் அவற்றை எய்தும் வாய்ப்புக்கள் அணுக முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன. பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உவகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகளை மனித உரிமைகள் என்ற வகுதியில் உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது அனைத்து மக்களும் அங்கீகரிக்க்கூடிய சர்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற உரிமைகளாகும்.


ஆனால் அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட உரிமைகளாகும். இவ் அடிப்படை உரிமைகளானது மீறப்பட்டால் உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தோ அல்லது அது தொடர்பான நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோ நிவாரணம் பெற்றுக் கொள்ளமுடியும்.


அதேநேரம் பொதுவான மனித உரிமைகள் மீறப்பட்டால் உள்நாட்டில் நிவாரணம் பெற முடியாது.

ஐக்கிய நாடுகள் சபனையின் மனித உரிமைகள் பிரகடனம்


முதன்முதலில் 26 நாடுகள் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இப்பிரகடனமானது 1945 யூன் மாதம் கைச்சாத்திடப் பட்டது. இதன் முதலாவது கூட்டம் இலண்டனில் 1946 இல் இடம் பெற்றது. இதன் முக்குய குறிக்கோளாக உறுப்புரிமை நாடுகளிடையே இறைமையையும்,சமத்துவத்தையும் பேணுவதுடன் பிணக்குகளை சமாதான முறையில் தீா்வு காண்பதும் எந்த அரசினதும் ஆட்புல உரிமைகளையும் அரசியல் சுதந்திரத்தை மதித்து நடப்பதுமாகும்.


அதன் பின்னா் சர்வதேச ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக சமயம், பால், மொழி வேறுபாடின்றி எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை வழங்குவதற்கும் அவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக தனித்தும் இணைந்தும் உழைக்க வேண்டும். இந்த அடிப்படையில் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பிரகடனமானது குடியியல் அரசியல் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் பற்றிய விரிவான முறையில் அமைந்த ஏற்பாடுகளை உள்ளடக்கியிருப்பதுடன் பொதுச் சபையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்பிரகடனத்தை வரைந்தவர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதியும் மனித உரிமைகள் ஐக்கிய நாடுகளின் குழுவின் தலைவருமான Eleanor Roosvelt ஆவார்.


இந்த சர்வதேச பிரகடனமானது ஆரம்பத்தில் சர்வதேச ரீதியாக மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அவர்களால் செய்யும் செயற்பாடுகளை மதிப்பதற்கும் அங்கத்துவ நாடுகளினை சட்ட ரீதியாக பிணிக்கும் மனித உரிமைகளின் விரிவான பொருத்தனைக்கு ஒரு விசைப் பலகையாகவும் உபயோகப் கடுத்துவதற்கே எனக் கருதப்பட்டது. எனினும் அதை வரைந்து கொண்டிருந்த காலப் பகுதியில் வல்லரசுகளிற்கு இடையில் நிலவிய கருத்தியல் முரண்பாடுகள் மற்றும் பனிப்போரின் காரணமாக இதன் உள்ளடக்கத்தில் ஏகமனதான ஒருமைப்பாடு ஒன்றுக்கு வருதல் அசாத்தியமாயிற்று.

சிறுவர் உரிமைகளை பேணுவோம்


சிறுவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வொராண்டும் அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினமாக உலகளாவிய அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் அறிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், விழாக்கள் என்பன நடத்தப்படுவதுடன் பல்வேறு தரப்பினராலும் சிறுவர் உரிமையைப் பேணுவதாக சபதங்கள் எடுக்கப்படுவது வழமையான நிகழ்வாயுள்ளன.

1924 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் சிறுவர் உரிமை பற்றிய கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையால் விரிவாகவும் தெளிவாகவும் சிறுவருக்குரிய உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனம் 1924 ஆம் ஆண்டின் பிரகடனத்தை விட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. இந்நிலையிலே, 1979 ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு பரந்த அளவில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 1989 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமை தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. 1992 ஆம் ஆண்டு மேற்படி உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை இலங்கையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிசெய்து ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, சர்வதேச சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையிலுள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கும் உரிமை சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. பதின் நான்கு வயது வரையான பிள்ளைகள் சிறுவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். இனம், மொழி, சமயம், பால் என்ற எந்தவொரு வேறுபாடின்றி குறிக்கப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும் உரிமை 14 வயது வரையான ஒவ்வொரு சிறுவர், சிறுமியருக்கும் உள்ளன. நடைமுறையில், இவ் விதிமுறைகள் பேணப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்யும்போது கவலைதரும் விடயங்கள் பல வெளிச்சத்திற்கு வந்து வேதனைப் படுத்துவதுடன் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட சட்ட விதிகளும் ஏட்டளவில் மட்டுமே பேணப்படும் அவலம் புரிகின்றது.

சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை பின்வருமாறு அமைகின்றது.

* வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை
*பிறப்பின்போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை
*பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை
*பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை
*கருத்தை வெளிப்படுத்தும் உரிமை
*சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் சமய மொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை
*சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை
*போதிய கல்வியைப் பெறும் உரிமை
*பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை
*பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை
*சித்திரவதை குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை
* சாதாராண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை
*சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை

இவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைமுறையில் உலக நாடுகளிலா கட்டும் அல்லது நமது நாட்டிலாகட்டும் இவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் கல்விக் கொள்கையாக சிறுவர்கள் என்ற பதின்நான்கு வயதுக்குட்பட்ட சகலருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டுமென்று உள்ளது. அதேபோன்று அவ் வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கமர்த்துவதும் குற்றமென்று சட்டவிதி கூறுகின்றது. அறிக்கைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சிறுவர் உரிமை தினத்திலே இலங்கையில் சகல சிறுவர்களும் தமக்குரிய அடிப்படை உரிமைகளை, இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனரா அதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தனிநபர் காட்டு மிராண்டித் தனங்களும் நிறுவன ரீதியான பயங்கரவாத செயற்பாடுகளும் இலங்கைச் சிறுவர்களின் உரிமைகளுக்குப் பாதகம் செய்கின்றன. இன, மத, மொழி ரீதியான பாகுபாடுகளும் மனிதப் பண்பை இழந்த சிந்தனை ஒழுக்கம் இழந்தவர்களாலும் பெரும் பாதிப்பை நம் நாட்டுச் சிறுவர்கள் அடைகின்றனர். உயிர்குடிக்கும் குண்டுகள், வெடி களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழும் சிறுவர்களையும் நிம்மதியாக சொந்த வீடுகளில் பெற்றோர்களுடன் வாழ முடியாது அகதிகளாக அநாதைகளாக அல்லற்படும் சிறுவர்களையும் பசிக்கு உணவின்றி பரிதவிக்கும் சிறுவர்களையும் கல்வி பெறமுடியாத நிலையில் கைவிடப்பட்ட சிறுவர்களையும் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகும் சிறுவர்களையும், சுதந்திரமாக நடமாடக்கூட முடியாது கட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களையும் இது போன்ற பல்வேறு உரிமை மீறல்களுக்கு உட்பட்டு வேதனையுடன் வாழும் சிறுவர்களையும் கொண்ட நம் நாட்டிலும் சிறுவர் உரிமை தினம் சிறப்பாகக் கொண்டாடுவது வேடிக்கையானது என்பதை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

இந்த நாட்டில் சிறுவர்கள் அதாவது எதிர்கால சந்ததியினர், பகை, வெறுப்பு, குரோதம், போன்ற தீய உணர்வுகளைப் புகட்டி இன, மத, மொழி முரண்பாடுகளை ஊட்டி வளர்க்கப்படும் அவலம், கொடுமை நிலவுகின்றது. இவ்வாறான நிலையில் வளர்ந்து வரும் நாளைய சந்ததியின் செயற்பாடுகள் எவ்வகையிலும் மேம்பட்டதாயிருக்க முடியாது.

உண்மையைக் கூறுவதனால் நாட்டைக் குட்டிச் சுவராக்கி,நாசமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இன்றைய வளர்ந்த, வயோதிப சமூகம் வளர்ந்து வரும் இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவதாயில்லை. நாளைய சமுதாயத்தின், நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்கள் நடைமுறையில் நிலவிவரும் தீய செயற்பாடுகளைத் தகர்த்து புதியதோர் சிந்தனையுடன் புதிய வழி,நல்ல வழிகாட்டுவதே சிறுவர்களின் உரிமைகளைப் பேணும் வழியாகும்.