Wednesday, September 24, 2008

மனித உரிமைகளுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள்


மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் என வரையறுக்கலாம். உயிர் வாழ்வதற்கான உரிமைகள், கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கான அடிப்படையான அம்சங்கள் என வரையறுக்கலாம். இது செயற்பாட்டில் இன்னொருவருடைய செயற்பாடுகளைப் பாதிக்கக் கூடாததாகவும் இருத்தல் வேண்டும். மனிதன் தனது இயற்கையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுள்ள வழிமுறைகள் என்றும் வேறு வகையில் கூறலாம். ஆரம்ப காலங்களில் மனிதன் கட்டுப் பாடற்ற பூரணத்துவமான உரிமைகளை அனுபவித்து வந்தான். காலம் செல்லச்செல்ல சனத்தொகை வளா்ச்சி அதிகரிப்பினால் வளங்கள் அருகி வரத் தொடங்கியதன் விளைவாக மனிதன் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை அனுபவிப்பதில் தடைகளும் இடையூறுகளும் ஏற்படத் தொடங்கின. இதன் காரணமாக மனிதன்- மனிதனாக வாழ்வதற்கு அடிப்படையான உரிமைகள் யாவை என வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.


உலகம் முழுவதுலும் மனித உரிமைகளை அனுசரித்து நடந்து கொள்ளல் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் அதிகளவிலான அழுத்த அதிகரிப்பு இருந்து வருகின்ற போதிலும் உலகின் பல பாகங்களில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் மீதான பாரிய மீறுகைகள் கட்டுமீறியவையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


உயிர் வாழ்வதற்கான உரிமைகள் கருத்துவெளியிடுவதற்கான சுதந்திரம், சித்திரவதையிலிருந்தும், மனிதாபிமானமற்ற நடத்துகை என்பவற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சுதந்திரம் மற்றும் ஏனைய பொதுவிலமைந்த தரங்களை அடைவதற்கான உரிமைகள் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த எல்லா மக்களும் அவற்றை எய்தும் வாய்ப்புக்கள் அணுக முடியாத அளவு தொலைவிலேயே இன்னும் காணப்படுகின்றன. பொதுவான உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் ஐ.நா.சபையாலும் ஏனைய நிறுவனங்களினாலும் வெளியிடப்பட்டுள்ள உவகளாவிய ரீதியில் அமைந்த பொதுவான உரிமைகளை மனித உரிமைகள் என்ற வகுதியில் உள்ளடக்கலாம். அத்தோடு மனித உரிமைகள் எனும்போது அனைத்து மக்களும் அங்கீகரிக்க்கூடிய சர்வதேச அங்கீகாரத்தைப்பெற்ற உரிமைகளாகும்.


ஆனால் அடிப்படை உரிமைகள் என்பது குறித்த நாட்டு அரசியல் யாப்பினால் உருவாக்கப்பட்ட உரிமைகளாகும். இவ் அடிப்படை உரிமைகளானது மீறப்பட்டால் உள்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கமைய நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்தோ அல்லது அது தொடர்பான நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோ நிவாரணம் பெற்றுக் கொள்ளமுடியும்.


அதேநேரம் பொதுவான மனித உரிமைகள் மீறப்பட்டால் உள்நாட்டில் நிவாரணம் பெற முடியாது.

No comments: