Tuesday, November 11, 2008

மன கவலைகளுக்கு பக்க விளைவற்ற அக்குபஞ்சர் சிகிச்சை


யானைப் பாகர்கள் அங்குசம் என்ற குச்சியின் முனையில் உள்ள சிறு ஊசியால் யானையின் உடலில் குத்தி, யானைகளைத் தங்களது கட்டுபாட்டில் வைத்திருப்பதை நாம் பல முறை பார்த்திருப்போம். இந்த முறையினை சற்று உற்று நோக்கினால், சீனர்கள் இந்த உலகிற்கு வழங்கிய மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை நம் கண்முன் வந்து போகும். இந்த நிலையில், இந்த மருத்துவ முறையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல நோயாளிகளைக் குணப்படுத்தியவருமான டாக்டர் திருமதி கலா தியாகராசாவை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, இந்த மருத்துவ முறை குறித்து, எம் மக்களின் சந்தேகங்களை கேட்டோம்.

· சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம், மற்ற சிகிச்சை முறைகளிலிருந்து எப்படி வேறுபட்டு, பலனைத் தருகிறது?

அக்கு என்றால் ஊசி என்றும், பஞ்சர் என்றால் குத்துவது என்றும் பொருள். சீனர்களால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது இந்த மருத்துவமுறை. மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆங்கில மருத்துவம், ஆயுள்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல மருத்துவ முறைகளில், மருந்து, மாத்திரைகள் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் மருந்து, மாத்திரைகள் எதுவுமின்றி, சிறு ஊசிகளை மனித உடலில் குறிப்பிட்ட இடத்தில் குத்தி, அதன் மூலம் உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசை ஆகியவற்றின் செயல்திறனை ஊக்குவிக்கும் மருத்துவமுறை தான் இந்த அக்குபஞ்சர் மருத்துவமுறை. இந்த மருத்துவ முறையை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருக்கிறது.

நமது உடலில் பதினான்கு சக்தியளிக்கும் ஓட்டப்பாதைகள் உள்ளன. இந்த ஓட்டப் பாதைகளில் புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில், ஊசிகளைக் கொண்டு, அக்கு பஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தில் நோயினால் தாக்கப்பட்ட பகுதியில் நேரடியாக சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் அக்குபஞ்சர் முறையில்,நேர் எதிரான ஓட்டப்பாதையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, தீ விபத்தால் பாதிக்கப் பட்ட உறுப்புகளுக்கு நுரையீரல் மற்றும் பெருங்குடல் தொடர்புடைய ஓட்டப்பாதையில் இருக்கும் புள்ளிகளில் சிகிச்சையளித்து குணமாக்குகிறோம். இதன் மூலம் நமது உடலில் உள்ள உறுப்புகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கிறது என்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

· இம்முறையில் நோயினை எப்படி கண்டறிகிறீர்கள்?

மனிதனின் கைகளில் உள்ள நாடிகளை பிடித்து பார்த்து அறிந்துகொள்கிறோம். இடது மணிகட்டுக்கு கீழே ரேடியம் ரத்தக் குழாயின் மீதிருக்கும் மேலோட்டமான நாடிகளும், அதே இடத்தின் ஆழத்தில் மூன்று நாடிகளும் உள்ளன. அதேபோல் வலது மணிகட்டில் மேலோட்டமாக இருக்கும் மூன்று நாடிகளும், அதன் ஆழத்தில் மூன்று நாடிகளும் உள்ளன. இந்த நாடிகளை பிடித்து பார்ப்பதன் மூலம், மனித உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக அறிந்துக்கொள்ள முடியும்.

· இந்த சிகிச்சை முறையில், உடலில் ஊசி குத்தப்படுவதால் வலி ஏற்படுமே? அதற்காக எப்படி சிகிச்சை வழங்குவீர்கள்?

நாடியை பிடித்து, நோயை கண்டறிந்த பின், சக்தி வழங்கும் ஓட்டப்பாதையில் உள்ள அக்குபஞ்சர் புள்ளியில் சிறு சிறு ஊசிகளை குத்தி, மெதுவாக வலது புறமாக திருப்பி சுற்றி விடுவோம். சுமார் பத்து முதல் இருபது நிமிடம் வரை இந்த ஊசி உடலில் குத்தப்பட்டு இருக்கும். பின் அதனை எடுத்துவிடுவோம். இந்த ஊசிகளை நேரடியாக அக்குபஞ்சர் புள்ளியில் குத்தப்படுவதால், குத்திய இடத்திலிருந்து இரத்தம் வராது. நோயின் தன்மைக்கு ஏற்றவாறு ஊசிகளை குத்துவோம். நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால், இரு தினங்களுக்கு ஒரு முறையும், தாக்கம் குறைவாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையும் குத்திக்கொண்டால் நோய் குணமாகும். அதே தருணத்தில் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு குத்த வேண்டிய ஊசிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும். இது மனித உடலில் உள்ள தசைகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதால், ஒரு முறை தாக்கி, குணமாக்கப்பட்ட நோய், மீண்டும் ஏற்படும் நிலை அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

· இந்த சிகிக்சையின் மூலம் குணமாக்கப்படும் நோய்கள் என்ன?

மன அழுத்தம் உள்ளிட்ட மன நோய்கள், ஆண்மைக் குறைவு, வலிகள், நரம்பு தொடர்பான நோய்கள், நுரையீரல் தொடர்பான சைனஸ், ஆஸ்துமா, பெண்களுக்கு ஏற்படும் மகப்பேறு மற்றும் மாதவிடாய் கோளாறுகள், வயிறு, குடல் தொடர்பான நோய்கள், சிறுநீரக நோய்கள், கண் நோய்கள் ஆகியவற்றை எளிதாக குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சை முறையில் மருந்துகள் எதுவும் உட்கொள்ளத் தேவையில்லை. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. கட்டணமும் குறைவு.

· சோரியாசிஸ் நோயினை இம்முறை மூலம் குணப்படுத்த முடியுமா?

இலங்கையின் கடலோர பகுதிகளிலும், தமிழகத்தின் எல்லா இடத்திலும் பரவலாக பரவியிருக்கும் இந்த நோய், தலையில் மண்டை ஓட்டின் மேல் பாகத்தில் பொடுகு போல் தோன்றி, பின்னர் உடலில் பல இடங்களில் வட்டமாகவும், சிறிதளவு உயர்ந்தும் காணப்படுகிறது. அதை சொரியும் போது, மீன் செதில் போல், பக்குகள் உதிரும். முழங்கை மடிப்பு, தொடை இடுக்குகளிலும், வயிறு, மூக்கு ஆகிய பாகங்களிலும் இவை அதிகமாக காணப்படும். முறையான மருத்துவத்தை மேற்கொள்ளாவிட்டால், உடல் முழுவதும் பரவி, மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கி, தாங்க இயலாத வலியினை ஏற்படுத்தும். இதனால் கை, கால்களை அசைக்க இயலாமல், ஒரே இடத்தில் முடக்கி விடும். எனவே இதனை ஆங்கில மருத்துவத்தில் 'சோரியாடிக் ஆர்த்திரைட்டீஸ்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நோய்க்கு மற்ற சிகிச்சை முறைகளில் மருத்துவம் பார்த்தால், அவை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்கும். இதற்கான நிரந்தர தீர்வை அக்குபஞ்சர் மட்டுமே வழங்குகிறது. இம்முறையில் நுரையீரல், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் தொடர்புடைய அக்குபஞ்சர் புள்ளிகளில் சிகிச்சை வழங்கினால், எத்தனை நாள்பட்ட 'சோரியாசிஸ்' நோயையும் குண மாக்கலாம்.

· மன அழுத்தத்திற்கு இந்த முறை மூலம் சிகிச்சை பெற்றால் பூரண பலன் கிடைக்குமா?

இன்றைய தினத்தில் அதிகமானோர் பாதிக்கப்படுவது மன அழுத்தத்தால் தான். காரணம் சொல்ல முடியாத மனக்கவலைகள், தாங்க இயலாத பணிப்பளு ஆகியவைகளைக் குறிப்பிடலாம். அதைவிட கம்பியூட்டரில் பணியாற்றும் தொண்ணூறு சதவீத இளைய சமுதாயத்தினர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இவர்கள் மற்ற மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்தால், பக்க விளைவுகளின் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. ஆனால் அக்குபஞ்சரில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், மன அழுத்தம் ஏற்படுவதற்கான மூல காரணமா கிய தாறுமாறான இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றை சீராக்க முடியும். அதனுடன் உடலுக்கு தேவையான 21 தாது உப்புகளையும், அதன் குறைபாடுகளையும் கண்டறிந்து, 'பெரிகார்டியம்' மற்றும் இருதயம் ஆகிய பகுதிகளில் அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டால் இவற்றைக் குணப்படுத்த இயலும்.

மேலும் கை, கால்களில் நடுக்கம், மனதை ஓரிடத்தில் நிலைப்படுத்த இயலாமை, உறக்கமின்மை ஆகியவற்றிற்கு தலைப் பகுதிகளில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளில் சிகிச்சை அளிப்பதன் மூலம்

குணப்படுத்த முடியும்.

No comments: