Friday, December 12, 2008

இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது


அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்று கொண்டதன் பின்னான செயற்பாட்டைக் காட்டவோ இல்லை என்றும் அதுமட்டுமன்றி (prefrontal cortex) பகுதியால் வழங்கப்படும் மேலதிக உத்வேகத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை முன்னொரு ஆய்வில் வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டினும் குறைவாகப் பேசுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக வறுமைச் சூழலில் வாழும் பெற்றோரைக் குறை கூற முடியாது என்று கருத்துரைக்கும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறான சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்றும் அதற்கேற்ற வகையில் குழந்தை வளர்ப்புத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

குழந்தைகள் வறுமைச் சூழலில் வாழ்வதால் அவர்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்/ தூண்டல்களின் அளவு குறைந்திருப்பதும், அழுத்தங்கள் மத்தியில் வாழ்வதால் மூளை முற்றான அபிவிருத்தியை காட்டத் தவறுவதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றைத் தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்குரிய சரியான வளர்ப்புச் சூழலை தீர்மானிக்க வேண்டியதுடன் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குச் சரியான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதைத்தான் தமிழ் புலவர் ஒளவையார் இளமையில் வறுமை கொடுமை என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரோ..!

Wednesday, December 10, 2008

2009ம் ஆண்டு இலங்கை வறுமை நிலையை அடையலாம்: உலக வங்கி எச்சரிக்கை


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் 2009ம் வருடம் நான்கு வீதமாக குறைவடையலாம். எனவே, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள "2009 ஆம் ஆண்டுக்கான உலகின் பொருளாதார நிலை" எனும் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2009 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறான ஒரு சரிவை சந்திக்கலாம், அதன் பொருளாதார வளர்ச்சி நான்கு வீதமாக குறைவடையலாம்.

இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 வீதமாகும். ஆனால் அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடி மிகுந்த ஆண்டாகவே இருக்கும்.

உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளே இந்த பாதிப்புக்கான காரணங்கள். இந்த பாதிப்புக்கள் தென்னாசிய பிராந்தியத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற தமது கணிப்புக்களை அடுத்த மாதமே தெரிவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆணையாளர் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது, 2009 ஆம் ஆண்டு ஏழு வீதம் பொருளாதார வளர்ச்சிகள் எட்டப்படும் என கவர்ச்சிகரமாக விளப்பரப்படுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.