Wednesday, December 10, 2008

2009ம் ஆண்டு இலங்கை வறுமை நிலையை அடையலாம்: உலக வங்கி எச்சரிக்கை


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் 2009ம் வருடம் நான்கு வீதமாக குறைவடையலாம். எனவே, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள "2009 ஆம் ஆண்டுக்கான உலகின் பொருளாதார நிலை" எனும் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2009 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறான ஒரு சரிவை சந்திக்கலாம், அதன் பொருளாதார வளர்ச்சி நான்கு வீதமாக குறைவடையலாம்.

இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 வீதமாகும். ஆனால் அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடி மிகுந்த ஆண்டாகவே இருக்கும்.

உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளே இந்த பாதிப்புக்கான காரணங்கள். இந்த பாதிப்புக்கள் தென்னாசிய பிராந்தியத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற தமது கணிப்புக்களை அடுத்த மாதமே தெரிவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆணையாளர் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது, 2009 ஆம் ஆண்டு ஏழு வீதம் பொருளாதார வளர்ச்சிகள் எட்டப்படும் என கவர்ச்சிகரமாக விளப்பரப்படுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: