Friday, October 17, 2008

கை வீங்கும், கால் வீங்கும், பணம் வீங்குமோ?

கையோ, காலோ... அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் அது வீக்கம்!

அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - பேப்பர் கரன்ஸி - ரூபாய் நோட்டுகள் அதிகமானால் அதுவே பணவீக்கம்!

மார்க்கெட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. மக்களிடம் ரூ. 200 கோடி ரூபாய் பணம் இருந்தால்...?

அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். பொருட்களின் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே பொருட்களை 200 கோடி ரூபாய் வரை விலை ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. விலைவாசி உயர்கிறது. அதாவது உயர்த்தப்படுகிறது.

மற்றொரு நிகழ்வைப் பார்க்கலாம். மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மார்க்கெட்டில் பொருட்களின் சப்ளை குறைத்துவிடுகிறது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வந்திருக்கின்றன. என்ன ஆகும்?

அப்பொழுதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். விலை உயரும்... அதாவது உயர்த்தப்படும்.

இவ்வாறு பணப்புழக்கம் அதிகரித்தால் அல்லது சப்ளை குறைவின் காரணமாக, இருக்கும் பணமே அதிகம் என்று ஆகிவிட்டால் ("Too munch of money, chasing too few goods...")
அந்த நிலையே பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பணப்புழக்கம் எப்படி அதிகரிக்கிறது?

நமது நாட்டில் ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அதாவது வரவை விட செலவு அதிகம்.

இப்படித் துண்டு விழும் செலவைச் சமாளிக்க அரசு வெறும் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துத் தள்ளுகிறது. பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்கிறது. விளைவு? பணவீக்கம்!

தனியார்துறைக்கு அளவுக்கு அதிகமாக பணத்தைக் கடனாக அளிப்பதாலும் பணப்புழக்கம் அதிகமாகி, பணவீக்கம் அதிகரிக்கிறது.

எனவே, இந்த இரண்டையும் தவிர்க்க வேண்டு. ஆனால் மன்மோகன்சிங் ஒன்றை மட்டும் சொல்கிறார்.

"பட்ஜெட் பற்றாக்குறையை - செலவை - குறைக்க வேண்டும்". எப்படி?

ஏழை மக்களுக்கான ரேஷன் அரிசிக்கு மானியமா? மானியத்தை வெட்டு! விலையை உயர்த்து. விவசாயிகளுக்கான உரத்துக்கு மானியமா? வெட்டு! விலையை உயர்த்து!

இதே மாதிரி சாதாரண மக்களுக்குத் தேவையான பொருட்களுக்கும் மின்சாரத்துக்கும் பஸ், ரயில் மற்றும் இதே போன்ற சேவைகளுக்கும் அளிக்கப்படும் மானியம் தொடர்ந்து வெட்டப்படுகிறது. விலை, கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்படுகிறது.

கடைசியில் சராசரிக் கணக்கு - மொத்தக் கணக்கு போட்டு பணவீக்கம் குறைந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

அப்படியானால், செலவைக் குறைக்க, வரவை அதிகரிக்க என்னதான் செய்வது?

* நமது நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அதைக் கைப்பற்ற வேண்டும்.

* கோடிக்கணக்கான ரூபாய் வருமான வரி பாக்கியைக் கறாராக வசூலிக்க வேண்டும்

* அரசு நிர்வாகத்திலும் பொதுத்துறையிலும் மண்டிப் போயிருக்கும் ஊழலைத் துடைத்தெறிந்தால் அவை வற்றாத கங்கைதான்.

* ஏழை மக்களுக்கான மானியத்தை வெட்டுவதற்குப் பதிலாக, ராணுவம் மற்றும் இது போன்ற உற்பத்தி தொடர்பற்ற சமாச்சாரங்களுக்குக் கோடானு கோடி ரூபாய் கொட்டி அழுவதை வெட்டி சுருக்க வேண்டும்

* நூறு கோடி ரூபாய்க்குத் திட்டம் போட்டு அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்து, விலைவாசி உயர்ந்து, கடைசியில் அதே திட்டத்தை ஆயிரம் கோடி ரூபாயில் நிறைவேற்றும் அராஜகத்தை நிறுத்த வேண்டும்.

- இவற்றைச் செய்தாலே பற்றாக்குறை பட்ஜெட்டுக்குத் தேவை இருக்காது. அதன் மூலம் ஏற்படும் கரன்ஸி நோட்டு அச்சடிப்பும் பணவீக்கமும் இருக்காது.

- ஜவஹர், 9.10.1992ல் ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

No comments: