அறிவு கொண்ட மனித உயிர்களைஅடிமையாக்க முயல்பவர் பித்தராம் (பாரதி)
இயற்கை சார்ந்த உயிரியல் அமைப்பில் மக்கள் உடலமைப்பு ரீதியாக ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்துள்ளார் என்பது உயிரியல் உண்மை. ஆனால் இந்த உயிரியல் வேறுபாடே சமூகத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்றும் ஏற்படுத்தி வருகின்றது. ஆண் பெண் பாகுபாடு என்பது வித்தியாசமானது. சமூகமானது ஆணை பாதுகாவலனாகவும் வலிமை பொருந்தியவனாகவும் சித்திரித்து, அவனை உயர் நிலையில் வைக்கின்றது. ஆனால் பெண்ணோ பேதை. அவளை இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் உரியவளாகக் கருதி, அவளை இழி நிலைக்குத் தள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
ஆண்வழிச் சமூகமானது ஆரம்பத்தில் பெண்களை அடக்கி ஒடுக்கியதன் மூலம் ஆணாதிக்க கலாசாரத்தினை நிலை நிறுத்தியது. உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். அதன் முதற்கட்டமாக உலகில் பெண்கள் போகப் பொருட்களாக ஆண்களால் கணிக்கப்பட்டனர். தன்னலமின்மை, தியாகம், பொறுமை போன்ற சில குணாம்சங்கள் பெண்களிடம் இயல்பாகவே காணப்படுவதனால், ஆண்கள் அதை சாதகமாகப் பயன்படுத்தி தம் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினர். அந்த வகையில் பெண்ணானவள் மனைவியைக் குறிக்கும் பெயரால் மனைவியானாள். கணவனோ கணங்களின் தலைவன் என்பதில் இருந்து கணவனானான். ஆண் சமூகத்தின் தலைவன் ஆக, பெண்ணோ வீட்டின் வேலைக்காரி ஆனாள்.
பிள்ளைகளைப் பெறுதல் அவர்களை வளர்த்தல், உணவு தயாரித்தல், வீட்டையும் வீட்டுச் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருத்தல், ஒவ்வொரு வழியிலும் கணவனுக்கு ஒத்தாசையாக இருத்தல் முதலியன திருமணமான ஒரு பெண்ணின் கடமைகளாக ஆண் சமூகத்தால் வரையறுக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மெய்யான பணி கணவனுக்கும் குழந்தைக்கும் பணி செய்தல் என்று ஆணாதிக்கம் கருதுகின்றது. பெண்களுக்கான வரையறைகளை வகுத்த ஆண் வீட்டில் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண்ணோ இழி நிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். அவளின் வாழ்வு வீட்டுக்குள்ளேயே அமுங்கி விடுகின்றது. அவளின் உரிமைகள், வளர்ச்சி என்பன திட்டமிட்டு ஆணாதிக்க சமூகத்தால் நசுக்கப்படுகின்றன.
இவ்வாறு ஆணின் அடக்கு முறைக்கு உள்ளான பெண் அவனின் உடலின்ப வேட்கைக்கு கருவியானாள். இதனால் கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகிவிட்டாள். பெண்ணின் நிலையை மேலும் கீழ் இறக்குவதாக இது அமைகின்றது. பெண்களுக்கு ஒதுங்கி வாழும் நிலையையும், தங்கி வாழும் நிலையையும் உருவாக்கிய ஆணாதிக்க சமூகம் பெண்ணை ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் இயந்திரமாக பிள்ளை பெறும் கருவியாக மட்டுமின்றி ஆணுக்கும் சேவை செய்யும் அடிமையாகவும் கேவலப்படுத்தியது.
பெண்கள் மரணமடையும் வரையிலும் குழந்தைகளைப் பெறட்டும். அவள் வேறெதுவாகவும் இருப்பதற்குத் தேவையுமில்லை. அதற்கு உரிமையுமில்லை என்ற டி. மார்டின் லூதரின் கருத்தானது ஆணாதிக்க சமூகத்திற்கு துணை போவதாய் இருக்கின்றது. பெண் என்ன குழந்தைகளை உற்பத்தி செய்யும் கருவியா? அவளுக்கென்று தனிப்பட்ட உரிமைகள், உணர்வுகள் எதுவும் இருக்கக்கூடாதா? அவளும் ஆணைப் போல் இரத்தம், நரம்பு, இதயம் உடையவள் தானே. பின்னர் ஏன் பெண் மட்டும் அடிமைப்படுத்தப்பட்டு கொடூரமாக நடத்தப்படவேண்டும்.
இந்த ஆணாதிக்க சமூகமானது தமது அடக்கு முறைக்கு இசைவாக பல செயற்பாடுகளில் இறங்கியது. பழமொழிகளையும் பாரம்பரியக் கதைகளையும் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு பெண்ணை அடிமைப்படுத்த முயற்சித்தது. அது அவர்களுக்கு ஆரம்பத்தில் வெற்றியையே தேடிக் கொடுத்தது எனலாம். அந்த வகையில் ""கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்'' என்று கூறியே பெண்ணின் அடிமைத் தனத்தை ஆண் சமுதாயம் பண்பாடாக்க முயற்சிக்கின்றது. கணவன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி அவனது அடிமையாக சேவை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அச்சம், மடம், நாணம், பொறுமை, அடக்கம் என்பவை பெண்ணுக்கு மிக முக்கியமாக கருதவேண்டிய பண்புகள் எனக்கூறி ஆணாதிக்க சமூகத்துக்குள் பெண்ணைப் பேணி வைக்கின்றனர். பெண்ணை இவ்வாறு அடிமைப்படுத்துவதன் மூலம் ஆண் வழிச் சமூகம் வளர்ச்சிபெற்றது. பெற்று வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பெண்களை அடக்கி ஒடுக்கிய காலம் இன்று மலையேறிவிட்டது. பெண்ணின் பெருமை உலகுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. பெண் புத்தி பின் புத்தி அல்ல. பெண் புத்தி முன்புத்தி என்று புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெண்ணினம் எதிர்பார்த்துப் போராட முயற்சி செய்யாததனால்தான் இதுவரை காலம் பெண்ணடிமைத்தனம் தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் பெண் இன்று போராடத் தயாராகிவிட்டாள். பெண்கள் இன்று மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக வெல்லற்கரியவர்களாக மீண்டும் எழுந்துள்ளார்கள். இன்று பெண்கள் பல துறைகளில் ஆண்களுக்கு ஒப்பாக நுழைந்து, அவர்களால் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆணாதிக்கம் தகர்க்கப்பட்டு ஆண் பெண் சமத்துவம் நிலவ வேண்டுமாயின் முதலில் ஆண்களுக்கு இணையான கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் என்பன பெண்களுக்குப் பூரணமாகக் கிடைக்க வழி செய்யவேண்டும். மண வாழ்க்கையில் கடமைகள், உரிமைகள் இருபாலாருக்கும் சம நிலையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பெண் மீதான ஆணின் அத்துமீறல்களுக்கு தண்டனை அளிக்கப்படவேண்டும் இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட்டால் தான் ஆண், பெண் சமத்துவம் நிலவ முடியும்.
மேலும் பெண் சுதந்திரமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஒரு ஆணின் உழைப்பைச் சார்ந்து பெண் இருக்கும் வரை ஆணின் பொருளாதார நலனுக்கு உட்பட்டுத்தான் பெண் சிந்திக்க முடியும். எனவே இதிலிருந்து பெண் மீண்டும் சமூக உழைப்பில் சுய ஆற்றலுடன் வாழும் போதுதான் அவளது சிந்தனை வெளிப்படும். பெண்கள் சுயமதிப்பும் பொருளாதார சுயசார்பும் பெற்றுவிட்டால் மாத்திரமே சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
No comments:
Post a Comment