Tuesday, October 28, 2008

நினைவு மையம் (Memory Centre)

அமெரிக்காவில் உள்ள ஒரு நரம்பியல் நிறுவனத்தில் 1952-53ஆம் ஆண்டுவாக்கில் 43 வயது நிரம்பிய பெண்மணி ஒருவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவர் ஒருவர் அவரது தலையின் ஒரு பகுதியைத் திறந்து மூளையை ஆய்வு செய்தார். இவ்வாய்வு நடைபெறுகையில் அப்பெண்மணிக்கு முழு நினைவு இருந்ததோடு மட்டுமல்ல அவர் எவ்வித வலிக்கும் ஆளாகவில்லை. அறுவை சிகிச்சை நடைபெற்ற அப்பகுதி மட்டும் மரத்துப் போகின்றவகையில் உணர்விழப்பு மருந்து அளித்திருந்தனர். இந்த வியத்தகு அறுவை சிகிச்சையை நடத்தியவர் டாக்டர் பென்·பீல்ட் என்ற மருத்துவர். அறுவை சிகிச்சையின்போது தம் கையிலிருந்த கருவி ஒன்றிலிருந்து கம்பிகளின் வழியாக திறந்திருந்த மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மின்சாரம் செலுத்துவதற்கு அவர் ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.

டாக்டர் பென்ஃபீல்ட் கம்பிகளின் வழியே மின்சாரத்தை மூளையின் குறிப்பிட்ட அப்பகுதியில் செலுத்தியவுடனே, அந்தப் பெண்மணி ஒரு குழந்தையைத் திட்டுவது போலப் பொருளற்ற சொற்களை உளறத் தொடங்கினார். ஆனால் மின்சாரம் செலுத்துவதை நிறுத்தியவுடனே, அப்பெண்ணும் உளறுவதை நிறுத்தி விட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பிய அப்பெண்மணியிடம் டாக்டர் பென்ஃபீல்ட் கேட்டார்: "சிகிச்சையின்போது நீங்கள் கேட்ட இப்பேச்சுகள் நினைவிற்கு வருகின்றனவா?, அவற்றைப் பேசியவர் யார் என்பது தெரிகிறதா?" சிலவற்றை நினைவுபடுத்திப் பார்த்த அப்பெண்மணி இப்பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன்; ஆனால் அவற்றை நான் பேசவில்லை எனக் குறிப்பிட்டார். மீண்டும் டாக்டர் அப்பெண்ணிடம் இப்பேச்சுகளை யாரிடமிருந்து கேட்டீர்கள் என வினவ, அவர் தன் தாய் தன்னை இப்பேச்சுகளால் திட்டியதாகப் பதில் கூறினார்.

"உங்கள் தாய் இப்போது உயிருடன் இருக்கிறாரா?" டாக்டர் வினவினார். "இல்லை. அவர் இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன" அப்பெண்மணி விடை கூறினார். வியப்படைந்த டாக்டர் மீண்டும் வினவினார் : "அப்படியானால், இந்நிகழ்ச்சிகளைக் கனவு கண்டீர்களா?" பெண்மணி கூறினார்: "இல்லை, நிகழ்ச்சிகளை நினைவு படுத்திக் கற்பனை செய்து பார்த்தேன்; சிறு பெண்ணாகவே மாறிவிட்டேன்; என் தாய் என்னை அடிக்கடி திட்டும் சொற்களால் திட்டுவதாகவே உணர்ந்தேன்."

நினைவு மையத்தின் புதிர்களைக் கண்டறிய விரும்பிய டாக்டர் பென்ஃபீல்ட் இத்தகையப் பரிசோதனைகள் பலவற்றைச் செய்தார். மூளையில் நினைவு மையத்தின் இருப்பிடத்தையும், அம்மையத்தில் நினைவுகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பதையும் தமது ஆய்வுப் பரிசோதனைகள் வாயிலாக இறுதியில் பென்ஃபீல்ட் கண்டறிந்தார். மனித மூளையின் பணிகளில் மிகவும் வியக்கத்தக்க, புதிய, நம்பமுடியாத பல தகவல்கள் அவரது பரிசோதனைகள் வாயிலாக வெளிவந்தன. தமது ஆய்வில் சிறப்புச் சோதனையாக நினைவு மையச் சோதனையை பென்ஃபீல்ட் மேற்கொண்டார்.

டாக்டர் பென்ஃபீல்ட் காக்கை வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போதே, மனித மூளையின் செயல்பாடுகளில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வந்தார். மூளையின் குறிப்பிட்ட பகுதி சரியான முறையில் இயங்காமலிருப்பதே காக்கை வலிப்பு நோய்க்குக் காரணம்; அப்பகுதியை அறுவை சிகிச்சையின் வாயிலாக அகற்றிவிட்டால் நோய் குணமாகும் என அவர் நினைத்தார். எனவே மூளையின் அப்பகுதியை அறுவை சிகிச்சை நடத்தி நீக்குவதற்கான வழி வகையைக் கண்டறிந்ததோடு, மூளையின் நினைவு மையத்தில் சோதனைகளையும் நடத்தினார்.

மூளையிலுள்ள நினைவு மையத்தின் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் மின்சாரத்தைச் செலுத்தினால், அப்புள்ளியில் பதிவாகியுள்ள நினைவுகள் வாய் வழியே வெளிப்படும். நினைவுப் பகுதியில் இத்தகைய புள்ளிகள் ஆயிரக் கணக்கில் உள்ளன; அவற்றில் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு புள்ளியிலும் ஒரு குறிப்பிட்ட வகையான நினைவு பதிவாகியிருக்கும். இந்த நினைவு மையத்தை ஒரு கிராமஃபோன் இசைத்தட்டுக்கு ஒப்பிடலாம். இசைத்தட்டின் எந்த ஒரு வரியில் கிராமஃபோன் இசைத்தட்டு ஊசியை வைத்தாலும், அவ்வரியில் பதிவாகி இருக்கும் பாடல் வரிகளின் சொற்கள் அல்லது இசை ஒலி வெளிவரும். நினைவு மையமும் இவ்வாறே செயல் புரிகிறது. நினைவு மையத்தின் எந்தப் புள்ளியில் மின்சாரத்தைச் செலுத்தினாலும் அப்புள்ளியில் பதிவாகி இருக்கும் சொற்கள் தூண்டப்பெற்று உதடுகள் வழியே வெளிவரும்.

மனித வாழ்வில் நடைபெற்ற சாதாரணமான அல்லது அசாதாரணமான எந்த ஒரு நிகழ்வும் அவனது மூளையின் நினைவு மையத்தில் இயல்பாகவே பதிவாகி விட¸¢றது. சில நேரங்களில் நம் வாழ்வில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அவற்றின் பயன்பாடின்மை காரணமாக மறந்து விடுகிறோம். அதே நேரத்தில் வேறு சில நிகழ்வுகளை அவற்றின் முக்கியத்துவம் காரணமாக வாழ்நாள் முழுதும் நினைவில் வைத்திருக்கிறோம். ஆனால் எது முக்கியமற்றது, எது முக்கியமானது என்பதை நமது மூளை அறிவதில்லை. எல்லா நிகழ்வுகளையும் மூளை நினைவு மையத்தில் பதிவு செய்து அவற்றை வாழ்நாள் முழுதும் சேமித்து வைத்துக் கொள்கிறது.

நினைவு மையத்தில் சேமித்து வைக்கப்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட நினைவிற்கு இணையான சில நிகழ்வுகள் அல்லது விவாதங்கள் நடைபெறும்போது அக்குறிப்பிட்ட நினைவு மீண்டும் புத்துயிர் பெறுகிறது. இப்புத்துயிர்ப்பு, நமது மூளையின் நினைவு மையத்தில் உரிய புள்ளியை நமது உடலில் நடைபெறும் இயற்கை உணர்ச்சிகள் தூண்டுவதால் நிகழ்கிறது. இத்தூண்டல் செயலை நிறைவேற்ற டாக்டர் பென்ஃபீல்ட் மின் அலைகளைப் பயன்படுத்தினார்.

ஏதேனும் ஒரு பொருள் பற்றிச் சிந்திக்கும்போது, நினைவு மையத்தில் அப்பொருளுக்கு உரிய நினைவுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் புள்ளிகளை இயற்கை உணர்வுகள் தூண்டி விடுகின்றன; இதனால் எண்ணங்கள் துண்டிக்கப்படாமல் சிந்தனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. சில வேளைகளில் தொடர்பில்லாத, வேறு நினைவுப் புள்ளியை இயற்கை உணர்ச்சிகள் தூண்டிவிடுவதால், சிந்தனை ஓட்டம் தடைபடுவதுமுண்டு. இதனால் தொடர்பில்லாத வேறு சில சிந்தனைகளும் நமது நினைவுக்கு வரக்கூடும். பார்வை, கேட்கும் திறன், பேச்சு இவற்றிற்கான மையங்கள் மூளையின் எப்பகுதியில் அமைந்துள்ளனவோ, அங்கேயே நினைவு மையமும் அமைந்துள்ளது. இந்நினைவு மையத்துடன் நமது அன்றாட வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. நாம் சிலவற்றைக் கேட்கும்போது அல்லது உற்றுப் பார்க்கும்போது, நமது மூளையில் உயிர் வேதியியல் சமிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு பதிவாகும் சமிக்கைகள் எப்போதும் நீக்கப்பட இயலாதவை. நினைவுச் சேமிப்பகமானது நம் வாழ்நாள் நீடிப்பதற்கேற்ப விரிந்து செல்லக்கூடியது.

நாம் வாழ்வில் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போது, அதற்குத் தொடர்புள்ள பழைய நினைவுகள் வெளிப்படுகின்றன. இதனாø பழைய மற்றும் புதிய அனுபவங்கள் ஒன்றிணைந்து முற்றிலும் புதியதோர் அனுபவம் உருவாகிறது எனலாம். ஒரு சுவையான எடுத்துக்காட்டுடன் இதனை விளக்குவோம்.

சிறு குழந்தை ஒன்று மிகப் பெரியதோர் நாயை முதன்முறையாகப் பார்க்கிறது. நாய் பற்றிய அனுபவம் இதற்கு முன்பு இல்லாததால் குழந்தை எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். திடீரென்று அந்த நாய் குரைத்து குழந்தை மீது பாய்கிறது. அச்சமுடன் திகிலுற்ற அக்குழந்தை வீறிட்டு அலறுகிறது. பெற்றோர் நாயை விரட்டி விட்டு அக்குழந்தையைத் தேற்றுகின்றனர். சிறிது நேரத்தில் குழந்தை அந்நிகழ்ச்சியை மறந்து விட்டு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுகிறது. சில நாட்களுக்குப் பின்னர் குழந்தை வேறொரு நாயை மீண்டும் காண நேர்கிறது. அந்த நாய் குரைக்கவில்லை; குழந்தை மீது பாயவில்லை; வாலை ஆட்டிக்கொண்டு அமைதியாக இருக்கிறது. இருப்பினும் குழந்தை முன்பு போலவே வீறிட்டு அச்சத்துடன் அழத் துவங்குகிறது. முந்தைய நிகழ்வு குழந்தையின் மூளையில் பதிவாகி, அந்நினைவு இப்பொழுது வந்திருப்பதே குழந்தையின் அழுகைக்குக் காரணம் எனலாம்.

டாக்டர் பென்ஃபீல்டின் குறிப்பிடத் தகுந்த இக்கண்டுபிடிப்பே அவரது மன நல சிகிச்சையில் முக்கிய பíகு வகித்தது.ஒரு மனிதன் தனது குழந்தைப் பருவத்தில் அனுபவித்த அதிர்ச்சிகள், கசப்பான அனுபவங்கள் ஆகியன நினைவு மையத்தின் ஒரு மூலையில் தங்கியிருந்து எதிர் காலத்தில் மனநோய்க்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. இத்தகைய மன நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அவர்களது மூளையின் நினைவு மையத்தில் பதிவாகி இருக்கும் நினைவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு வகையான மன நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க இத்தகைய ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் வெற்றியும் சிறந்த முன்னேற்றமும் உண்டாகியுள்ளன என்பதில் ஐயமில்லை.

No comments: