Monday, October 20, 2008

நிதி மூலதனம் உற்பத்திகளையே உறிஞ்சுகின்றது


நிதி மூலதனம் உற்பத்தியையும் உறிஞ்சுவதால், உற்பத்திக் கூறுகளே அழிகின்றது. இந்த நிதி மூலதனத்தை படைக்கும் உற்பத்தியோ உழைப்பிலானது. நிதி மூலதனம் பெருத்து வீங்குவது, அதன் இருப்புக்கான விதி. தனது ஒழுக்கக்கேடான இருப்பு சார்ந்து, உற்பத்தியையும் உழைப்பையும் உறிஞ்சிவிடுகின்றது. உற்பத்தியும், உழைப்பும் வெறும் சடலங்களாக மாறிவிடுகின்றது. அது செயலிழந்து நலிந்து போகின்றது.

இப்படி நடமாடும் இந்த பிசாசுகளின், மிக அண்மைய காலத்தைய வரலாறு என்ன? நாடுவிட்டு நாடு கடக்கும் வங்கி தொழில், 1960இல் மொத்த உலக உற்பத்தியில் 1 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இது 1980இல் 20 சதவிகிதமாக அதிகரித்தது. அதை பாதுகாக்க, விரிவாக்க, சூறையாட உருவாக்கப்பட்டதுதான் உலகமயமாதல்.

இப்படி எதார்த்தத்தில் நிதி மூலதனம், பெருமெடுப்பில் சூறையாடுவதற்காக உற்பத்திக்கு வெளியில் குவிந்துவிடுகின்றது. இப்படி நிதி மூலதனம் உற்பத்தியில் ஈடுபடுவதிலும் பார்க்க, அதிக இலாபத்தை பெறும் வக்கிரத்தால் சூல் கொண்டு நிற்பதால், போட்டி அதிகரிக்கின்றது. உற்பத்தி மீதான மூலதனத்தின் பங்கை வாங்கும் சூதாட்டத்திலும் இறங்குகின்றது. வட்டித் தொழிலும் அத்துடன் உற்பத்தி மூலதனத்தை வாங்கி அதை உறிஞ்சிய பின் துப்பிவிடுகின்றது.

பங்கு என்ற இந்தச் சூதாட்டத்தில், வீங்க வைத்து வெம்ப வைத்துதான் நிதி மூலதனம் இலாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்ற நிலை. பங்குகள் தலைகால் தெரியாத வேகத்தில் ஓடும் போது, நிதி மூலதனம் பெருமெடுப்பில் வந்து குதிக்கின்றது. இதுவே மிகப் பெரிய உலகச் சூதாட்டங்களில் ஒன்றாகிவிடுகின்றது.

உலகின் பங்கு பத்திரச் சந்தை 1970இல் 1,00,000 கோடி டொலராக மட்டும் இருந்தது. இது 1980இல் 2,00,000 கோடி டொலராகியது. 1990இல் 12,00,000 கோடி டொலராகவும், 1995இல் 20,00,000 கோடி டொலராகவும், 1998இல் 25,00,000 கோடி டொலராகவும் அதிகரித்தது. 1970இல் இருந்தைவிட 25 மடங்காக பெருகியது. இந்த நிதி சூதாட்டம் மூலம் சம்பாதித்தல் என்பது, உற்பத்தியானதல்ல. இழப்பு என்பது அதன் விதி. இங்கு உழைப்பு பயன்படுத்தப்படுவதில்லை. சேமிப்புகள், உற்பத்திகள்தான் சூறையாடப்படுகின்றது. மறைமுகமாக சுற்றுவழிகளில் மனித உழைப்பு உறிஞ்சப்படுகின்றது. இது திவால் உற்பத்தியை மட்டுமல்ல, உழைப்பையும் இல்லாதாக்குகின்றது.


மறுபக்கத்தில் நாட்டை சுற்றி வளைத்து விற்றல். அதாவது நேரடிக் கடனுக்கு பதிலாக, பத்திரங்கள் விற்கப்படுகின்றன. இப்படி 1996இல் உலகளாவில் விற்கப்பட்ட பத்திரங்கள் பெறுமதி 5,30,000 கோடி டொலராகும். இது நாட்டை பகுதிபகுதியாக நிபந்தனை இன்றி விற்பதற்கு வழி செய்கின்றது. பெருமளவிலான நிதி, தமக்கு இடையில் கடுமையான போட்டியுடன், ஒன்றையொன்று விழுங்கும் ஒழுக்கக்கேட்டுடன்தான் இயங்குகின்றது. தன்னை பெருக்குவது என்ற பிசாசுத்தனத்துடன், தனக்கு கீழ் அனைத்தையும் மாற்றி விடுவதற்கு முனைகின்றது.


இப்படி உலக மக்களின் சிறு சேமிப்புகளையும், உழைப்பின் மிச்சமீதங்களையும் கொள்ளையிடுவதை தவிர வேறு வழி கிடையாது. சூதாட்ட விடுதிகளில், அதிக அளவிலான கனவுகளுடன் எப்படி பணத்தைப் போட்டு இழக்கின்றனரோ, அதேபோல் பங்குப் பத்திரத்திலும் அன்றாடம் நிகழ்கின்றது. இந்தச் சூதாட்டம் என்பது, அதை இழப்பதை அடிப்படையாகக் கொண்டது. பங்குச் சந்தை என்பதே மற்றவன் பணத்தை திருடும் பகிரங்கமான சூதாட்ட மையம்.


இந்தப் பணம் ஏகாதிபத்தியங்களில் இருந்துதான் பெருமளவில்பாய்கின்றது. அங்குதான் செல்வம் குவிந்து வருகின்றது. உலகளாவிய பணத்தின் இருப்பு தான், பங்குச் சந்தையையும் ஆவியாக இறங்கி உறிஞ்சுகின்றது.


உலக அளவில் பணம் வைப்பு எந்த பணத்தில் உள்ளது என்பதைப் பார்த்தால், அதன் சூறையாடு திறனையும் இனம் காணமுடியும். (தற்போது ஈரோ)




1975- 1992 1992
டொலர் 69.1 64.4
ஜப்பான் யென் 5.6 8.3
ஜெர்மனிய மாக் 13.1 13.2
பவுன், பிராங், சுவிஸ் பிராங் 7.2 8.4
மற்றையவை 4.9 5.5


சர்வதேச நிதி என்பது, ஏகாதிபத்திய நலனுக்கு இசைவானது மட்டுமல்ல, அவர்களின் பணத்திலும் உள்ளது. இது நிதி மூலதனத்தைக்கொண்டு உலகைச் சூறையாட வசதியாகவும், வாய்ப்பாகவும் மாறிவிடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளின் கையிருப்புகள் கூட ஏகாதிபத்தியப் பணத்தில் வைத்திருப்பது என்பதே, இங்கு விசித்திரமான உண்மை.


உதாரணமாக ஆசிய மத்திய வங்கி தனது சேமிப்பின் 70 சதவிகிதத்தை அயல் நாட்டு நாணய சேமிப்பு நிலையங்களில் வைத்துள்ளது. இதன் மொத்தத் தொகை 1,70,000 கோடி டொலராகும். இந்த நிதியை அமெரிக்காவின் கடன் பத்திரங்களில் முதலிடுகின்றனர். அதாவது நிதியில் 80 முதல் 90 சதவிகிதத்தை இதற்காக செலவு செய்துள்ளனர். பத்திரப்பங்கான சூதாட்டத்தில் இடும் இவர்கள், கடனை அடைத்து நாட்டைப் பாதுகாக்க பயன்படுத்துவதில்லை.


டாலரின் சரிவும், கடனை மீளப் பெறத் தூண்டும் போது, கடன் பத்திரம் திவõலாகிவிடும் என்பதே உண்மை. அமெரிக்கா இந்த நிதியைத் தர முடியாது என்று அறிவிக்கும் பயங்கரமும் நிகழும், நிகழ்கின்றது. வெளிநாடுகளின் நாணய கையிருப்பில், 73 சதவிகிதம் டொலரிலேயே இருந்த அபாயம், கத்தி முனையில்தான் உலகை நடக்க வைத்தது. தொடர்ச்சியான சர்வதேச நெருக்கடிகள், தொடர்ச்சியான ஏகாதிபத்திய முரண்பாடுகள், டொலரின் சரிவு என்பன, மாற்று (ஏகாதிபத்திய) நாணயத்தில் பணத்தை வைத்திருப்பதை தூண்டியது. இருந்தபோதும் டொலர் தான், நிதியின் மொழியாக அதன் ஆன்மாவாக இன்றும் நீடிக்கின்றது.


இப்படிப்பட்ட நிதி மூலதனம் உற்பத்திக்கு வெளியில், உற்பத்தியை உறிஞ்சி சூறையாடுகின்றது. உற்பத்திக்கான சகல அடிப்படைகளும் தகர்க்கப்படுகின்றன. நிதி மூலதனத்தின் சூறையாடலுக்கு இசைவாக, உற்பத்தி மூலதனம் ஈடுகொடுக்க முடியாது நெருக்கடிக்குள்ளாகின்றது. யார் உழைப்பில் இருந்து அதிகம் சூறையாடுவது, என்ற வெறி புதிய போக்காகியுள்ளது. உற்பத்தி மூலதனம், கடுமையான நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது.


நிதி மூலதனம் வீங்கி நிற்கின்றது. பெருமளவில் நிதியைத் திரட்டி வைத்துக் கொண்டு, அடங்காப் பசியுடன் அலைகின்றது. இப்படி 1995இல் நாள்தோறும் 90,000 கோடி டொலர் உற்பத்திக்கு வெளியிலான, பணப்புழக்கத்தில் ஈடுபட்டது. இது 2003இல் 3,00,000 கோடி டொலராகியது. இப்படி உற்பத்திக்கு வெளியில் நாள்தோறும் நிகழும் பணப்புழக்கத் தொகை 2,00,000 முதல் 3,00,000 (2 முதல் 3 டிரில்லியன்) கோடி டொலராக மாறியது. லண்டன் ஈரோ டாலர் சந்தையில் நாள் ஒன்றுக்கு புரளும் நிதியோ, 30,000 கோடி டொலராகியது. வருடம் இது 75,00,000 (75 டிரில்லியன்) கோடி டொலராகியது. உலகில் நாள் ஒன்றுக்கு நிதி மாற்றப்படும் தொகையோ 15,000 கோடி டொலராகவுள்ளது. வருடம் 38,00,000 (38 டிரில்லியன்) கோடி டொலராகவுள்ளது.


ஐரோப்பிய ஏகபோக வங்கிகள் கொடுக்கல் வாங்கல் மூலம் நாள் ஒன்றுக்கு 3,00,000 கோடி டொலரை, அதாவது வருடம் 7,50,00,000 கோடி டொலரை (750 டிரில்லியன்) கையாளுகின்றது. இது உலக வர்த்தகத்தைப் போல் 25 மடங்கு அதிகமாகும். இது போல் அன்னியச் செலாவணி சந்தையில் நாள் ஒன்றுக்கு 1,50,000 கோடி டொலரை கையாளுகின்றது. அதாவது வருடம் 3,50,00,000 கோடி (350 டிரில்லியன்) டொலராகும். இது உலகப் பொருள் மற்றும் சேவைத்துறை போல் 12 மடங்கு அதிகமாகும்.


நிதி மூலதனம் இப்படி உலகைச் சூறையாடுவதில் காட்டுகின்ற தீராத காதல், சமூகத்தை மலடாக்கி அது கொழுக்கின்றது. உற்பத்தி மூலதனம் உருவாக்கும் உழைப்பைச் சூறையாட, இதற்கு வெளியிலான இந்த நிதி மூலதனம் அன்றாடம் இயங்குகின்றது. இது தன்னை இந்த வழிகளில் பெருக்கிக் கொள்வதால், நிதி மூலதனத்தின் இயக்கம் என்பது உயிர்க்கொல்லியாக மாறிவிடுகின்றது.
இது போலியான வடிவில் கூட தன்னை நிலைநிறுத்தி சூதாட்டத்தில் இறங்கி விடுகின்றது. இப்படி போலியான நிதி மூலதனம் 25,00,000 கோடி டொலராகும். அதாவது வருடம் 62,50,00,000 கோடி (6,250 டிரில்லியன்) டாலர் போலியாக சூதாட்டத்தில் உள்ளது. ஆனால் உலக வருடாந்த வாணிபம் 1,00,00,000 கோடி (100 டிரில்லியன்) டொலர் மட்டுமேயாகும். போலியாக நிதி மூலதனம் 62 மடங்கு மேலாக இயங்கி, சூதாட்டத்தை நடத்துகின்றது. வர்த்தகம் என்பதே உண்மைப் பணமற்ற, போலியான சுழற்சிக்குள் நடத்தப்படுகின்றது. அசல் எது? போலி எது? என்பது இனம் காணமுடியாத வகையில், நிதிமூலதனமே போலியாகிவிட்டது.


மற்றொரு உண்மை, இந்த உலக அமைப்பின் இழிநிலையை தெளிவாகவே பறை சாற்றுகின்றது. அதாவது உலகில் நாள்தோறும் கைமாறும் 7 டொலரில் 1 டொலர் தான் வர்த்தகத்திற்கு பயன்படுகின்றது. அத்துடன் நாள்தோறும் 1,20,000 முதல் 1,50,000 கோடி டொலர், உற்பத்தி அல்லாத துறையில் கைமாற்றப்படுகின்றது. எப்படிப்பட்ட ஒரு உலக ஒழுங்கு?


உலகில் ஏழு டொலருக்கு ஒரு டொலர்தான் வர்த்தகத்தில் ஈடுபடும் போது, ஆறு டொலர் மனித இனத்துக்கு எதிரான வகையில் மற்றொரு தளத்தில் செயலாற்றுகின்றது. இப்படி பெரும் தொகையிலான சூறையாடல் என்பது, உலகமயமாக்கலின் உச்சக் கொப்பளிப்பாகும். இந்த நிதி மூலதனத்தின் அனைத்து விதமான செயற்பாடும், உழைப்பின் மீது தான் நடத்தப்படுகின்றது. மனித உழைப்புதான் செல்வம். அந்தச் செல்வத்தை அடைவது, எந்த வழியாகவும் இருக்கலாம். ஆனால் அதன் ஒழுக்கக்கேடு என்பது சூறையாடுவது தான்.


போலியான சூழ்ச்சியை நிதி மூலதனம் மூலம் கட்டமைக்கின்ற உலகமயமாதலின் உண்மை நிலவரமோ பயங்கரமானது. 2001இல் உலகளாவிலான உள்நாட்டு உற்பத்திகளின் மொத்தப் பெறுமதி 31,00,000 கோடி (31 டிரில்லியன்) ஈரோ மட்டும் தான். இதில் ஏற்றுமதி இறக்குமதி 13,00,000 கோடி (13 டிரில்லியன்) ஈரோக்கள் தான். ஆனால் உற்பத்தி சாராத (ஈடுபடாத) பணமாற்று மட்டும் 3,60,00,000 கோடி (360 டிரில்லியன்) டொலராக இருந்தது. நடப்பது போலியான பொய்யான சூதாட்ட மூலம் சம்பாதிப்பது. உற்பத்திக்கு வெளியில் வெறும் பேப்பர் பொருளாதாரம் ஒன்று கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மையான நிதி மூலதனம் இல்லாமலேயே, உண்மையான பொருட்களும் இல்லாமலேயே ஒரு போலியான வர்த்தகம் நடத்தப்படுகின்றது. இது உலக உழைப்பின் வளத்தை உறிஞ்சி, அதன் மேல் சொகுசாகவே இயங்குகின்றது. இதுவே குமிழிப் பொருளாதாரமாகி, வீங்கி வெம்பி மிதக்கின்றது.


உற்பத்தியை விட பல மடங்காக, உழைப்பை விட பற்பல மடங்காகி, இது வீங்கி வெம்பிப் போய் நிற்கின்றது. உழைப்பிலான உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில் இந்த போலியான பணமாற்றுகள் இயங்குகின்றது. சூறையாடப்படுவது இதற்குள்தான். இதனால் முதலாளித்துவத்தின் உண்மை பெறுமானத்தில் கூட, நுகர்வோருக்கு பொருட்கள் மூலம் கிடைப்பதில்லை.


நிதி மூலதனம், அதனுடன் சேர்ந்து இயங்கும் போலியான நிதி மூலதனத்தின் இருப்பு என்பதும், அதன் வாழ்வு என்பதும், மனித உழைப்பின் மீதான அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு உழைப்பைச் சூறையாடுவதுதான். சுதந்திரம், ஜனநாயகம் என்பது இந்த அர்த்தத்தில் மட்டும்தான், ஒரு சமூக அடிப்படையாகவும் சமூக ஒழுங்கை நிர்ணயிக்கின்ற காரணியாகவும் உள்ளது

1 comment:

சந்திப்பு said...

அன்புள்ள சுமன் நிதி மூலதனத்தின் அபாயம் குறித்து மிகச் சுருக்கமாகவும், அதே சமயம் மிகத் தெளிவாகவும் புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள். இன்றைய உலக ஒழுங்கு என்பது நிதி மூலதனத்தின் அராஜகத்தில்தான் கட்டி எழுப்பப்படுகிறது. இது படிப்படியாக உலப் பொருளாதாரத்தை மூழ்கடிக்கும் பெரும் சுனாமியாக உருவெடுக்கும். வாழ்த்துக்கள் தொடர்ந்து இதுபோன்ற கட்டுரைகள் தமிழில் வருவது மிக மிக முக்கியமானது. தொடருங்கள் உங்கள் பயணத்தை.
கே. செல்வப்பெருமாள்