Tuesday, October 28, 2008

"தாவரங்களுக்கும் உயிருண்டு"

தாவரங்களும் பிற உயிரினங்களைப் போன்றே வாழ்க்கை நடத்துவன என்று உலகப் புகழ் பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் டாக்டர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858-1937) நிறுவிய போது இவ்வையகமே அவரைக் குழப்பத்துடன் நோக்கியது.
மற்ற உயிரினங்களைப் போன்று தாவரங்களும் துன்ப, துயரங்களுக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகின்றன என அவர் கண்டறிந்தார். சில போதைப் பொருள்களுக்கு உள்ளாகும்போது தாவரங்களும் தம் நினைவை இழந்து மயக்கமுறுகின்றன என்றும் டாக்டர் போஸ் ஆய்வு செய்து வெளியிட்டார்.

டாக்டர் போஸின் முடிவுகள் அறிவியல் உலகையே குழப்பமடையச் செய்தன; தாவர உலகம் என்னும் புத்தம் புதியதோர் உலகமே கண்டறியப்பட்டது. தாவர உயிரினங்கள் பற்றிய தமது ஆய்வுகளையும், ஆய்வு முடிவுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளாக ஒரு நூல் வடிவில் டாகடர் ஜகதீஷ் சந்திர போஸ் 1902ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலின் பெயர் "The Reaction of Living and Non-living" என்பதாகும்.

தாவரங்களின் செயற்பாடுகளுள் பல மனிதர்களின் மற்றும் விலங்குகளின் செயற்பாடுகளை ஒத்தனவே என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளை போஸ் மேற்கொண்டார். நுரையீரல்கள் இல்லாவிட்டாலும், தாவரங்கள் சுவாசிக்கின்றன; வயிறு இல்லாவிடினும் தாவரங்கள் உணவைச் செரிக்கின்றன; தசைகள் இல்லாவிடினும் அவை பல செயல்களை மேற்கொள்ளுகின்றன; நரம்பு மண்டலம் இல்லாவிட்டாலும் தாவரங்கள் உணர்ச்சித் தூண்டல்களுக்கு உள்ளாகின்றன; இவற்றை நிரூபிப்பதற்கான சோதனைகள் பலவற்றை அவர் நடத்தினார்.

டாக்டர் போஸ் தாவரங்கள் சுருங்குவதைப் பதிவு செய்யும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார்; அதற்கு "ஒளியிழை நாடிப்பதிவி (Optical Pulse Recorder)" எனப் பெயர். இக்கருவியின் உதவியோடு தாவரங்களின் உள் செயற்பாடுகளைப் பதிவு செய்ததுடன், பல்லிகள், தவளைகள், ஆமைகள், பழங்கள், காய்கறிகள் தாவரங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை அவர் விளக்கிக் காட்டினார். தாவரங்கள் மின் அலைகளை உற்பத்தி செய்கின்றன என்பதையும், பிற உயிரினங்களைப் போன்று அவையும் களைப்படைந்து போகின்றன என்பதையும் கண்டறிந்தார்.

அவர் தமது ஆய்வுகளுள் ஒன்றை மேற்கொண்டிருக்கும் போது, இறந்து போகும் தாவரம் ஒன்று வலிமை மிக்க மின்னோட்டத்தை வெளிப்படுத்துவதைக் கண்டறிந்தார். அளவுக்கு அதிகமான கரியமில வாயுவை உட்கொள்ளும்போது தாவரங்களும் மற்ற உயிரினங்களைப் போன்றே இறந்து விடுகின்றன என போஸ் நிரூபித்தார். அதே வேளையில் உயிர்வளியின் உதவியுடன் அவை பிற உயிரினங்களைப் போன்று உயிர் பெற இயலும் என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

டாக்டர் போஸ் அவர்களின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்று என்னவெனில், போதைப் பொருள்களின் தாக்கத்தால் தாவரங்களும் மயக்க நிலையை அடைகின்றன என்பதாகும். இதற்கான சோதனையின் போது தாவரங்கள் மயக்க நிலை காரணமாக, ஆழ்துயில் கொள்வதையும், பின்னர் மெதுவாக மயக்க நிலை நீங்கி அவை இயல்பு நிலைக்குத் திரும்புவதையும் அவரால் கவனிக்க முடிந்தது.

தாவரங்களின் செயற்பாடுகள், அவற்றின் வளர்ச்சி முறை, அவற்றுள் உள்ள திரவம் மேல் நோக்கிப் பாய்தல் போன்ற பலவும், அவை சுற்றுச் சூழலில் இருந்து பெறும் ஆற்றலின் காரணமாகவே நிகழ்கின்றன என்றும், இந்த ஆற்றலை அவை தம்முள் சேமித்து வைத்துக் கொள்கின்றன என்றும் போஸ் நிறுவினார்.

போஸ் 1918ஆம் ஆண்டு "கிரெஸ்கோகிராஃப் (Crescograph)" என்னும் கருவி ஒன்றை வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாகத் தாவரங்களின் இயக்கங்களைப் பல்லாயிரம் மடங்கு உருப்பெருக்கத்தில் காண முடிந்தது. மேலும் தாவரங்களில் ஒரு நிமிடத்திற்குள் நிகழும் மாற்றங்களையும் இக்கருவி பதிவு செய்யக்கூடியதாக விளங்கியது. ஒரு சில தாவரங்களைத் தொட்டாலே அவற்றின் வளர்ச்சி தடைபடுவதாகவும் அவர் கண்டுபிடித்து வெளியிட்டார்.

டாக்டர் போஸ் அவர்களின் சிறப்பு வாய்ந்த ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும் பற்றிப் புகழ் மிக்க பிரெஞ்சு சிந்தனையாளர் ஹென்ரி பெர்க்சன் இவ்வாறு பாராட்டிக் கூறினார்: "டாக்டர் போஸ் செய்த சோதனைகளும், கண்டுபிடித்த கருவிகளும் ஊமைத் தாவரங்களுக்குப் பேசும் ஆற்றலை வழங்கி உள்ளன."

தாவரங்களின் விருப்பு வெறுப்புகள் என்ன, அவற்றின் துன்ப துயரங்கள் யாவை, அவை கூற விரும்புவது என்ன, அவற்றுக்கு இன்னலும், இடரும் விளைவிப்பன யாவை, அவற்றிற்கு மகிழ்ச்சி ஊட்டுவன எவை, என்பன பற்றிய விவரங்களை எல்லாம் ஜகதீஷ் சந்திர போஸின் கண்டுபிடிப்புகள் விளக்கிக் கூறின. தாவரங்களின் சுவாசிப்பையும், குரல் ஒலியையும் ஒரு கருவியால் உணரச் செய்யலாம் எனவும், தாவரங்கள் உயிர் வாழ்வன, சுவாசிப்பன எனவும் தமது கண்டுபிடிப்புகள் வாயிலாக போஸ் அவர்கள் நிரூபித்தார். மலர் ஒன்றைப் பெண் ஒருத்தியின் மீது எறிந்தால், அதிகத் துன்பம் உண்டாவது பெண்ணுக்கா அல்லது மலருக்கா என ஓர் அறிவியல் அறிஞர் போஸின் ஆய்வுகள் குறித்துப் பேசும் போது வினவினார்.

உலக இயற்பியல் மாநாடு 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்றது; அதில் போஸ் "பன்முகத்தன்மை கொண்ட இயற்கையில் அடிப்படை ஒருமைப்பாடு" என்ற தமது ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்; அதனைச் செவிமடுத்த அறிஞர்கள் போஸின் கருத்துகளைக் கேட்டு திகைத்து நின்றனர். "இயற்பியல் நிகழ்ச்சிகள் ஒரு வரம்புக்குக் கட்டுப்படாதவை; குறிப்பிட்ட எல்லைக்குள் இயற்பியல் நிகழ்வுகளை அடக்க இயலாது; உயிருள்ளவைக்கும், உயிரற்றவைக்கும் இடையேயான வேறுபாடுகள் நாம் நினைப்பது போல் அதிகமல்ல, ஆய்வுக்கு அப்பாற்பட்டதுமல்ல;" இவை போன்ற கருத்துகள் அவரால் விளக்கப்பட்டன.

டாக்டர் போஸின் கருத்துகள் அக்கால மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அவரது கருத்துகளைப் பொருளற்றவை எனக் கூறியோரும் உண்டு. ஆனால் தமது முடிவுகளை 1902ஆம் ஆண்டு போஸ் வெளியிட்டு, செயல்முறை விளக்கம் செய்து காட்டிய போது மக்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

பிரிட்டிஷ் அரசு 1917ஆம் ஆண்டு "சர்" பட்டம் அளித்து அவரைப் பாராட்டியது. தமது 59ஆம் அகவையின் போது கலகத்தாவில் ஓர் ஆய்வு நிறுவனத்தை போஸ் நிறுவினார். போஸின் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஜெர்மன், ஆஸ்திரிய விஞ்ஞானிகள் பாராட்டிப் பேசும் போது, இந்தியா அறிவியல் துறையில் பன்மடங்கு முன்னேறியுள்ளதாக ஒப்புக்கொண்டனர்.

இயற்கை முழுதும் உயிர்ப்பும், உணர்வும் நிரம்பி, கிளர்ச்சியுடன் துடித்துக் கொண்டு இருப்பதாக ஜகதீஷ் சந்திர போஸ் கூறி வந்தார். இயற்கை தன்னைப் பற்றிய பல புதிர்களை வெளியிட்டு வருவதாகவும், உரிய முறையில் அவற்றைப் புரிந்து கொண்டால் இயற்கையுடன் உறவாடுவதும், உரையாடுவதும் கடினமல்ல என்பதும் அவரது கருத்தாகும்

No comments: